கரூர் மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும் இணைந்து, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள அஞ்சா கவுண்டன்பட்டி கிராமத்தில் கல்குவாரி அமைக்க பண்ணப்பட்டி பகுதியில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கரூர் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறுப்பு பொறியாளர் ஜெயராஜ் மற்றும் சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சம்பந்தப்பட்ட பண்ணப்பட்டி மற்றும் எருமார்பட்டியைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
பொதுமக்கள் தங்கள் பகுதியில் கல்குவாரி அமைந்தால் வேலைவாய்ப்பு பெருகும் என கருத்து தெரிவித்தனர்.
அதேசமயம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கரூர் மாவட்டத்தில் அதிகப்படியான கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இதனால், கல்குவாரிகளில் ஒலி மாசு, சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு வருவதால், இந்த குவாரி அமைக்க அனுமதி தர கூடாது என தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். பதிவு செய்த கருத்துக்களை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.