கொல்லங்கோடு அருகே புன்னமூட்டு கடை பகுதியில் உள்ள ஒரு தனியார் நிலத்தில் கொல்லங்கோடு நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் நகராட்சி பகுதியில் உள்ள குப்பைகளை கொண்டு வந்து கொட்டி செல்வது வழக்கம். இந்த குப்பை சருகுகள் நேற்று (பிப்.6) இரவு 8.30 மணி அளவில் திடீரென தீப்பற்றி எரிய துவங்கியது. இதை பார்த்த பொதுமக்கள் கொல்லங்கோடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடம் சென்ற கொல்லங்கோடு போலீசார், கொல்லங்கோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்க முயற்சி செய்தனர். இதனிடையே தீ மளமளவென எரிந்ததால் அந்த நிலத்தில் நின்ற பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தேக்கு மரங்கள் தீயில் கருகி உள்ளது. மேலும் நெருக்கடி மிகுந்த சாலையோரம் இந்த தீ எரிந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தீ பிடித்ததற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.