கருங்கல் அருகே பூட்டேற்றி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (41) கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு மகள், மகன் உள்ளனர். மகள் ஏழாம் வகுப்பு படிக்கிறார்.
இந்த நிலையில் மகள் பங்கேற்ற நடன நிகழ்ச்சி நாகர்கோவிலில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக சுரேஷ் மனைவி மகளுடன் பைக்கில் நாகர்கோவில் சென்று விட்டு பின்னர் நிகழ்ச்சி முடிந்து ஊருக்கு நேற்று இரவு திரும்பி கொண்டு இருந்தார்.
அப்போது கருங்கல் அருகே கருக்குப்பனை என்ற பகுதியில் வரும் போது அந்த வழியாக வந்த சொகுசு கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து பைக் மீது மோதி தள்ளி விட்டு, மின்கம்பத்தில் மோதி நின்றது. இதில் பைக்கில் வந்த சுரேஷ் மனைவி மற்றும் மகள் கீழே தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
அக்கம் பக்கத்தினர் மூன்று பேரை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கொண்டு செல்லும் வழியில் சுரேஷ் உயிரிழந்தார். மனைவி மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய வருகின்றனர். தற்போது இந்த பைக் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.