செங்கையில் மழைக்கால வைரஸ் காய்ச்சல் அதிகரிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், பவுஞ்சூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்குகொளத்தூர், புனிதவொமையார்மலை ஆகிய வட்டாரங்களில், 49 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், செய்யூர், மாமல்லபுரம், திருப்போரூர், தாம்பரம் பகுதிகளில் அரசு மருத்துவமனைகள் உள்ளன. இங்கு, காய்ச்சல் பிரிவு ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மழைக்காலக் காய்ச்சல் முகாம், கடந்த அக்டோபர் மாதத்தில் துவங்கி, மார்ச் மாதம் வரை நடைபெறுகிறது. இந்த முகாமில், ஒவ்வொரு வட்டாரத்திலும், இரண்டு மருத்துவக் குழுக்கள் என, 16 மருத்துவக் குழுவினர் உள்ளனர். இந்த குழுவில் டாக்டர் உட்பட 15 பேர் பணிபுரிந்து வருகின்றனர். நடமாடும் எட்டு மருத்துவக்குழுக்கள் மூலம், காய்ச்சல் அதிகமாக இருக்கும் பகுதிகளை கண்டறிந்து, சிகிச்சை அளித்து வருகின்றனர். மாவட்டத்தில், 24 சிறப்புக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த மருத்துவக் குழுவில் மருத்துவர், செவிலியர், ஆய்வக நுட்பஞானிகள் மற்றும் உதவியாளர்கள் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த முகாம் காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடைபெறும். ஒவ்வொரு வட்டாரத்திலும் இரண்டு முகாம்கள் நடக்கின்றன. காய்ச்சல் உள்ளவர்கள் முகாமில் பரிசோதனை செய்து, சிகிச்சை பெறுகின்றனர்.