செங்கல்பட்டு: பெண்ணை சரமாரியாக வெட்டிய இளைஞர்கள்..
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் அடுத்த செட்டிபுண்ணியம் டாக்கா நகர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்(25). பால் வியாபாரி. நேற்று (நவம்பர் 23) மாலை 5: 30 மணிக்கு, பரனுார் வட்டார போக்குவரத்து அலுவலகம் பின்புறம் கட்டப்பட்டு, பாதியிலேயே நிறுத்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் இருந்த மாடுகளை ஓட்டிவர சென்றார். அப்போது, அங்கு மது அருந்திக்கொண்டிருந்த, அதே பகுதியைப் சேர்ந்த அர்ஜுன், அய்யனார், தமிழ் உள்ளிட்டோர், தினேஷிடம் சண்டையிட்டுள்ளனர். இதைக்கண்ட தினேஷின் உறவினர்கள், மறைமலை நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில், மீண்டும் இரவு தினேஷின் வீட்டிற்கு வந்த அந்த மூன்று பேரும், தினேஷிடம் சண்டையிட்டனர். அப்போது, தினேஷின் தாய் கன்னியம்மாள் தினேஷை அறையின் உள்ளே வைத்து பூட்டினார். அதனால் கோபமடைந்த மூவரும், கன்னியம்மாளின் தலை மற்றும் கைகளில் வெட்டிவிட்டு தப்பினர். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக, மறைமலை நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.