காஞ்சிபுரத்தில் அதிக ஒலி எழுப்பிய வாகனங்களுக்கு அபராதம்
காஞ்சிபுரத்தில் தனியார் பேருந்து மற்றும் கனரக லாரிகளில் விதிகளை மீறி பொருத்தப்பட்டுள்ள அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களால் பொதுமக்கள், நோயாளிகள், முதியவர்கள் உள்ளிட்டோர் சிரமத்திற்கு ஆளாகின்றனர் என, மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன. இதை தொடர்ந்து, காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் தலைமையில், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் லோகநாதன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பிரகாஷ், தலைமை விஞ்ஞானி அலுவலர் சுப்பிரமணி, சுற்றுச்சூழல் விஞ்ஞானி ரோஜினா பேகம் உள்ளிட்ட குழுவினர், நேற்று காலை காஞ்சிபுரத்தில் திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, பேருந்து நிலையத்தில், தனியார் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும், ஏர் ஹாரன்களை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், ஒலி அளவை கணிக்கீடு செய்யும் கருவி வாயிலாக அளவீடு செய்தனர். இதில், அரசு விதிமுறைகளை மீறி, தனியார் பேருந்து, வேன் உள்ளிட்ட 16 தனியார் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், சம்பந்தப்பட்ட வாகனங்களுக்கு 2. 07 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர். மீண்டும் இதுபோன்ற செயலில் ஈடுப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, வாகன ஓட்டிகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து அனுப்பினர்.