திருத்தேரி தாங்கல் ஏரியில் குப்பை கழிவுகள்
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் ஊராட்சியில், திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையோரத்தில், திருத்தேரி தாங்கல் ஏரி உள்ளது. இந்த ஏரி 2022ம் ஆண்டு 'அம்ரித் சரோவர்' திட்டத்தின் கீழ், 39. 40 லட்சம் ரூபாய் மதிப்பில் தூர்வாரப்பட்டு, கரைகள் பலப்படுத்தி ஏரிகளை சுற்றி இரும்பு வேலி அமைக்கப்பட்டன. ஏரியின் நடுவே, பறவைகளுக்காக மணல் திட்டுகள் அமைக்கப்பட்டு அதில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த பணிகள் நிறைவடைந்து, 2022ம் ஆண்டு டிச. , மாதம் அப்போதைய செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், செங்கல்பட்டு தி. மு. க. , -- எம். எல். ஏ. , வரலட்சுமி உள்ளிட்டோர் ஏரியை திறந்து வைத்தனர். தூர்வாரப்பட்ட ஏரியை முறையாக பராமரிக்க வேண்டும் என, ஊராட்சி நிர்வாகத்திற்க்கு கலெக்டர் திறப்பு விழாவின் போது அறிவுறுத்தினார். இருப்பினும், ஓராண்டாக சிங்கபெருமாள் கோவில் ஊராட்சியில் இருந்து சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள், இந்த ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் கொட்டப்பட்டு, தீ வைத்து எரிக்கப்படுவதால், தண்ணீர் மற்றும் சுற்றுச்சூழல் மாசடைந்து வருகிறது.