திருப்போரூரில் தவறுதலாக பத்திரம் பதிவு என கூறி வாக்குவாதம்
சென்னை புறநகர் பகுதியான திருப்போரூரில் பதிவுத்துறை சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு, சார்பதிவாளராக கிருஷ்ணமூர்த்தி உள்ளார். ஓ. எம். ஆர். , மற்றும் ஈ. சி. ஆர். , சாலையில் உள்ள 50 க்கும் மேற்பட்ட கிராமங்கள் இந்த சார்பதிவு அலுவலகத்தின் கீழ் வருகிறது. முகூர்த்த நாளையொட்டி ஏராளமான பத்திரப்பதிவு நடந்ததால் மக்கள் கூட்டம் காணப்பட்டது. இந்நிலையில் நெல்லிக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கர் என்கிற பார்த்தசாரதி மற்றும் அவருடன் சிலர் திருப்போரூர் சார் பதிவாளர் அலுவலகம் வந்தனர் சார் பதிவாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் நெல்லிக்குப்பம் பகுதியில் இரண்டரை ஏக்கர் நிலம் முறைகேடாக பதியப்பட்டு விற்பனை செய்துள்ளதாக கூறி ஏன் இவ்வாறு நடந்தது என கேள்வி எழுப்பினர். எங்களுக்கு நியாயமான பதிலை கூறாமல் இங்கிருந்து செல்ல மாட்டோம் என்று கூறியதால் ஒரு மணி நேரம் பத்திரப்பதிவு நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு காணப்பட்டது. இதனால் பத்திரபதிவுக்கு வந்த பொதுமக்கள் காத்திருந்து அவதிப்பட்டனர் ஆவணம் பதியப்பட்ட சம்பந்தப்பட்ட நபர்களை அழைத்து விசாரணை நடத்துவதாகவும், தவறு என்றால் நடவடிக்கை எடுப்பதாகவும் சார் பதிவாளர் தரப்பில் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.