அரசு மருத்துவமனையில் சிகிச்சையளித்த தூய்மைப் பணியாளர்கள் - வைரல் வீடியோ

2214பார்த்தது
ஈரோடு அரசு தலைமை மருத்துவனையில் பணிபுரியம் தூய்மை பணியாளர்கள் மருத்துவர்களாக உருவெடுத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையை நாடி தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும் இங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு தேவையான உயர் சிகிச்சைகள் அளிப்பதற்கு போதுமான வசதிகள் இல்லாததால், அவர்கள் சேலம், கோவை போன்ற பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பபட்டு வந்தனர்.

இதனையடுத்து அரசு மருத்துவமனை வளாகத்தில் பல்நோக்கு மருத்துவமனை கட்ட வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையின் படி, 67.02 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்நோக்கு உயர் சிறப்பு சிகிச்சை பிரிவு கட்டப்பட்டது. இங்கு, நரம்பியல் பிரிவு, இருதய நோய் பிரிவு, கண் அறுவை சிகிச்சை, புற்றுநோய், பிளாஸ்டிக் சிகிச்சை, குழந்தைகள் நல அறுவை சிகிச்சை என பல்வேறு உயர் சிகிச்சைகள் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குறைபாடு காரணமாக உரிய சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க துவங்கியுள்ளனர். குறிப்பாக, நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள இடத்தில் சுத்தம் செய்வதற்காக வரும் தூய்மை பணியாளர்கள், நோயாளிகளுக்கு பரிசோதனை செய்வது, ட்ரிப்ஸ் போடுவது போன்ற பல்வேறு பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள நிலையில், இது தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்டரச்சர் வழங்காமல் தாயை மகள் தூக்கி சென்ற விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், தற்போது அடுத்த கட்டமாக தூய்மை பணியாளர்கள் மருத்துவர்களாக மாறியுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி