திண்டுக்கல் அருகே சென்னம்மநாயக்கன் பட்டி வடக்கு பகுதியில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ கற்பக விநாயகர் ஸ்ரீ முத்தாலம்மன் ஸ்ரீ கருப்புசாமி திருக்கோயிலின் இரண்டாம் ஆண்டு உற்சவ விழா நடைபெற்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சாமி சாட்டுதலுடன் இந்த திருவிழா ஆரம்பம் ஆனது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவரும் விரதம் இருந்து காப்பு கட்டி கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை மாலை 4 மணி அளவில் கற்பக விநாயகருக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை ஸ்ரீ முத்தாலம்மன் கண் திருத்த நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. திருவிழாவின் கடைசி நாளான இன்று விழாவின் முக்கிய நிகழ்வான ஸ்ரீ முத்தாலம்மன் பூஞ்சோலை வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஸ்ரீ முத்தாலம்மன் அலங்கரிக்கப்பட்டு ஊரின் முக்கிய விதிகளில் வழியாக வலம் வந்தது. ஊர்வலத்திற்கு முன்பாக 50க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மஞ்சள் நீராடி அம்மனை வரவேற்றனர்.
பின்னர் ஊரில் குளத்தில் முத்தாலம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பெண்கள் முளைப்பாரியை சுற்றி கும்மியடித்து நடனமாடினர். அம்மனுக்கு பூஜைகள் நடைபெற்ற பின்னர் முளைப்பாரிகளை குளத்தில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.