தர்மபுரி அருகே உங்கரான அள்ளி, முக்கல்நாயக்கன் பட்டி ஆகிய கிராமங்களுக்கு இடையே குட்டக்கரை பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் அரசு மதுக்கடை அமைக்க திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அரசு தொடக்கப்பள்ளி, அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆகியவை இந்த பகுதியின் அருகே செயல்படுவதால் மாணவ- மாணவிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இந்த பகுதியில் மதுக்கடை அமைக்ககூடாது என்று கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த பகுதியில் மதுக்கடை அமைக்கப்பட்டால் பல்வேறு பணிகளுக்கு அந்த வழியாக சாலையில் சென்று வரும் பெண்கள் அச்சமடையும் நிலை ஏற்படும் என்பதால் அங்கு மதுக்கடை அமைக்க கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று(செப்.17) இரவு எட்டி மரத்துப்பட்டி அருகே உள்ள சாலையில் கிராம மக்கள் திரண்டனர். அந்த பகுதியில் மதுக்கடை அமைக்க கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி சாலையில் அமர்ந்து திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த காவலர்கள் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அந்த பகுதியில் மதுக்கடை அமைக்க விடமாட்டோம் என்று கிராம மக்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.