விஜய் உடனான சந்திப்பு கூட்டணிக்காக இல்லை என்று பிரேமலதா விஜயகாந்த் விளக்கமளித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெக தலைவர் விஜய்யுடனான சந்திப்பு கூட்டணிக்கானது அல்ல. நட்புணர்வோடு நடைபெற்ற ஒன்று. விஜய் எங்களுக்கு புதியவர் கிடையாது. தனது கட்சியின் கொடி அறிமுகத்துக்கு முன்பாக எங்களது வீட்டுக்கு வந்து, மறைந்த தலைவர் விஜயகாந்தின் படத்துக்கு மரியாதை செலுத்தி, ஆசீர்வாதம் வாங்கி சென்றார். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
விஜய் புத்திசாலியான, அமைதியான பையன். நிச்சயமாக பிரச்சினைகளை எல்லாம் சமாளிப்பார். அதேபோல விஜய் திரை உலகில் நிறைய சவால்களை சந்தித்து இருக்கிறார். ஆனால் அரசியலை சினிமா போன்று எடுத்துக் கொள்ள முடியாது. அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் யோசித்து தான் எடுத்து வைக்க வேண்டும். இது ஒரு குடும்ப சந்திப்பு போன்றுதான் எங்களுக்கு அமைந்தது என தெரிவித்தார்.