ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் சொத்துகளை முடக்கவும், கொலைக்காக வழங்கப்பட்ட பணத்தை பறிமுதல் செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நேற்று வரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, நேரில் வந்து வெட்டியவர்கள், ரூட் எடுத்து கொடுத்தவர்கள், பண உதவி செய்தவர்கள், கொலை திட்டத்திற்கு உடந்தையானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், கைதானவர்களின் சொத்து விவரங்கள், பண பரிவர்த்தனைகள் குறித்து தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, கடந்த 5 மாதத்தில் அவர்களுக்கு எவ்வளவு பணம் வந்துள்ளது, எங்காவது சொத்து வாங்கி வைத்து உள்ளார்களா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்று கூலிப்படையாக செயல்படும் நபர்களின் சொத்துகளை முடக்கினால் ரவுடியிசம் குறையும் என போலீசார் கருதுகின்றனர். எனவே, தற்போது சிக்கியுள்ள 21 பேரின் சொத்து விவரங்களை கண்காணித்து, அவற்றை முடக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கைதான முகிலன், விஜயகுமார், விக்னேஷ் ஆகியோருக்கு நாட்டு வெடிகுண்டுகளை கொடுத்த ராஜேஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இவர், பிரபல ரவுடி சம்பவ செந்திலின் கூட்டாளி எனக் கூறப்படுகிறது.