பெரம்பூர் - Perambur

பணம் பெற்று வாலிபர் மாயம்: போலீசார் விசாரணை

பணம் பெற்று வாலிபர் மாயம்: போலீசார் விசாரணை

சென்னையை சேர்ந்த நகை மற்றும் அடகு கடை ஒன்று, பழைய நகைகளை வாங்குவதாக விளம்பரம் செய்துள்ளது. இதனை பார்த்த வாலிபர் ஒருவர், அந்த நகை கடைக்காரரை தொடர்பு கொண்டு, தனது நகையை ரூ. 2. 50 லட்சத்திற்கு சேலத்தில் உள்ள வங்கியில் அடமானம் வைத்துள்ளேன். அந்த பணத்தை எனக்கு கொடுத்தீர்கள் என்றால் நகையை மீட்டு உங்களிடம் விற்று விடுவேன், என கூறியுள்ளார். அதனை நம்பிய அந்த நகை கடைக்காரர், தன்னுடன் ஒருவரை உடன் அழைத்துக்கொண்டு, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, அந்த வாலிபர் கூறியபடி சேலம் சூரமங்கலம் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது, அந்த வாலிபர், ஓமலூரில் உள்ள வங்கியில் நகையை அடகு வைத்துள்ளதாகவும், அங்கு சென்று நகையை மீட்டுத் தருகிறேன். எனவே, நீங்கள் எனது வங்கி கணக்கிற்கு முன்னதாக ரூ. 2. 50 லட்சத்தை அனுப்பி வைக்க வேண்டும், என தெரிவித்துள்ளார். அதன்படி, அவரும் அந்த வாலிபரின் வங்கி கணக்கிற்கு ரூ. 2. 50 லட்சத்தை அனுப்பி வைத்துள்ளார். பின்னர், நகை கடை உரிமையாளரும், அந்த வாலிபரும் தனித்தனி பைக்கில் ஓமலூரில் உள்ள வங்கிக்கு சென்றபோது, வழியில் திடீரென அந்த வாலிபர் மாயமாகிவிட்டார். அவரை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. இதுபற்றி, நகை கடை உரிமையாளர் சூரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், பண மோசடியில் ஈடுபட்டது நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த பிரேம்குமார் (33) என்பது தெரிந்தது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


சென்னை