ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஜெபுனுல் ஆசாத் (33). இவர் கடந்த 5 மாதங்களாக சென்னை மண்ணடி தங்கப்பன் நாயக்கன் தெருவில் உள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கியிருந்து, பாரிமுனையில் உள்ள செல்போன் கடையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். ஜெபுனுல் ஆசாத் கடந்த 14ம் தேதி தனது நண்பர் முகமது ஜப்ரானிடம் ரூ. 6 லட்சம் கடன் பெற்றுக்கொண்டு தனது பைக்கில் புரசைவாக்கத்தில் உள்ள நகைக்கடையில் பணியாற்றும் சகோதரனை பார்க்க சென்றார்.
பிறகு அங்குள்ள கனரா வங்கியில் நண்பரின் வங்கி கணக்கில் ரூ. 70 ஆயிரத்தை செலுத்திவிட்டு வெளியே வந்தார். அப்போது ஜெபுனுல் ஆசாத் பைக் அருகே அடையாளம் தெரியாத 2 பேர் நின்றனர். பைக்கை எடுக்க முயன்ற போது, 2 பேரும் ‘நாங்கள் போலீஸ் என்று அறிமுகம் செய்து கொண்டு, ஹவாலா பணத்தை எடுத்து வந்துள்ளதாக கூறி ஜெபுனுல் ஆசாத் பையை ஆய்வு செய்த போது, அதில் ரூ. 5. 50 லட்சம் ரொக்கம் இருந்தது. உடனே 2 பேரும் ஜெபுனுல் ஆசாத்தை பைக்கில் ஏற்றி கொண்டு காவல் நிலையத்திற்கு அழைத்து செல்வதாக கூறி, புரசைவாக்கம் ராமா சாலையில் மிரட்டி அவர் வைத்திருந்த ரூ. 5. 50 லட்சத்தை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதை சற்றும் எதிர்பார்க்காத ஜெபுனுல் ஆசாத் வெளியே சொல்லாமல் 2 நாள் கழித்து கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணை நடத்திய போது, கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பை சேர்ந்த சார்லஸ் (36) என தெரியவந்தது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.