விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள் உட்பட்ட பகுதிகளில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில் " என்ற திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த நிலையில் காரியாபட்டி அரசு மேல்நிலை பள்ளிக்கு திடீர் ஆய்வு செய்த விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் அந்தப் பள்ளியில் பயிலும் மெல்ல கற்கும் மாணவர்கள் பதிவேடு மற்றும் பாட குறிப்பேடு, மாணவர்களின் மதிப்பெண் பட்டியல், மாணவர்களின் கல்வித் தரம், கற்பிக்கும் முறைகள் மற்றும் வருகைப் பதிவேடு ஆகியவற்றை வகுப்பு ஆசிரியர்களை கொண்டுவரச் சொல்லி தனித்தனியாக ஆய்வு செய்தார். பின்னர் பாடத்தில் பின்தங்கிய மெல்ல கற்கும் மாணவர்களை அழைத்து அவர்களது பதிவேடுகள் மற்றும் நோட் புத்தகங்களை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
அதில் மாணவர்கள் நோட்டில் எதுவும் எழுதாததால் அதிர்ச்சி அடைந்த ஆட்சியர் உடனடியாக ஆசிரியர்களை அழைத்து எந்த மாதிரியான பாடங்கள் நடத்தப்படுகிறது. ஏன் மாணவர்களை கண்காணிக்கவில்லை. இது போல் தொடர்ந்து நடந்தால் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் தொடர்ந்து குறைந்து கொண்டு தான் இருக்கும், உங்களது பதவிக்காலம் இன்னும் எத்தனை ஆண்டுகள் உள்ளது என கேட்டு மாணவர்கள் நலன் கருதி நீங்கள் வி. ஆர். எஸ்-ல் சென்றால் நன்றாக இருக்கும், மாணவர்களும் நன்றாக படிப்பார்கள் என அறிவுறுத்தி பள்ளியை விட்டு கிளம்பி சென்றார்.