விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே S. கல்விமடை கிராமத்தில் உள்ள கி. பி 9-ம் நூற்றாண்டை சேர்ந்த, மிகவும் பழமை வாய்ந்த, பிரசித்தி பெற்றதாக விளங்கும் அருள்மிகு ஸ்ரீ திருநாகேஸ்வரமுடையார் சமேத ஸ்ரீ திருநாகேஸ்வரி தாயார் திருக்கோயிலில் 24-ஆம் ஆண்டு புரட்டாசி மகாளய அமாவசை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதில் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளான சிவப்பெருமான் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் வில்வம், ரோஜா, செவ்வந்தி, சாமந்தி, தாமரை, மரிக்கொழுந்து, முல்லை, மல்லிகை பூ உள்ளிட்ட சுமார் 2 டன் எடையுள்ள 11 வகையான மலர்களால் சிறப்பு அபிஷேகம் செய்து அலங்கரிக்கப்பட்டு ஆராதனை நடைபெற்றது.
பின்னர் கோயிலில் இருந்து சிவவாத்தியங்கள், மேளதாளங்கள் மற்றும் வான வேடிக்கை முழங்க உற்சவர் பூ பல்லாக்கில், முளைப்பாரியுடன் கல்விமடையில் வீதி, வீதியாக உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அப்போது வீடுதோறும் பக்தர்கள் தேங்காய் உடைத்து சுவாமியை வரவேற்றனர்.
இந்த திருவிழாவில் மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.