சிவகாசி சிவன் கோவில் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்.
பக்தர்கள், பொதுமக்கள் வரவேற்பு.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி மாநகராட்சி பகுதி சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகம் இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. குறிப்பாக கிழக்கு ரதவீதி, சிவன் கோவிலை சுற்றியுள்ள இடங்கள், கருப்பசுவாமி கோவில் பகுதி உட்பட முக்கிய வீதிகளில் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் சாலையை ஆக்கிரமித்து கடைகளை வைத்துள்ளனர். இதனால் பஜார் மற்றும் கடை வீதிகளுக்கு நடந்து செல்லும் பொதுமக்கள், கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனை அடுத்து இன்று, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறை, வருவாய்த்துறையினர் முன்னிலையில் சிவன் கோவிலை சுற்றியிருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. மேலும், கருப்பசுவாமி கோவில் பகுதியிலிருந்த ஆக்கிரமிப்புகளும், கிழக்கு ரத வீதியிலிருந்த ஆக்கிரமிப்புகளையும் ஜேசிபி இயந்திரம் மூலம் அதிகாரிகள் அகற்றினர். ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதை அந்தப்பகுதியில் செல்லும் பக்தர்களும், பொதுமக்களும் வரவேற்றுள்ளனர். மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாதவாறு அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.