விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அடுத்த தேவதானம் அருகே நெற்பயிர்களை சேதப்படுத்தும் யானைகளால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். தேவதானம் அசையாமணி விலக்கு பாதையில் அமைந்துள்ள நச்சாடைபேரி கண்மாய் பாசன பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நெல் விவசாயம் நடைபெறுகிறது.
இந்நிலையில் 25 நாட்களாக வனப்பகுதியில் இருந்து வெளியேறி உள்ள யானைகள் கண்மாய் வழியே நெல்வயலுக்குள் புகுந்து சேதம் ஏற்படுத்துகின்றன. தினமும் மாலை 6:00 மணி முதல் காலை 6:00 மணி வரை அருகில் உள்ள மா, புளியந்தோப்புகளில் உலவி விட்டு நெல்வயலிலும் புகுந்து சேதம் ஏற்படுத்துகிறது. கண்மாயின் துவக்கப் பகுதியில் நுழைகிறது.
வயலின் நடுவே புகுந்துவிடும் என்பதால் சுற்றிலும் போக்கஸ் லைட் எரிய விட்டும், வெடி வெடித்தும் காவல் ஆட்களை நியமித்து கண்காணித்தும் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. உயிருக்கு பயந்து வேலையாட்களும் வருவதில்லை. வனத்துறையினர் விரட்டியும் மீண்டும் வந்துவிடுகிறது. விவசாயி கண்ணன் கூறியதாவது, கடந்த வருடம் யானை வரத் தொடங்கியது.
தற்போது ஏக்கருக்கு 40 ஆயிரம் செலவழித்தும் யானையை விரட்ட காவலுக்கு ஆட்களை நியமித்தும் வழியில்லை. இன்னும் சில நாட்களில் அறுவடை தொடங்க உள்ள நிலையில் இரண்டு ஏக்கர் சேதம் ஏற்பட்டுள்ளது. நிரந்தர தீர்வு காண அரசை எதிர்பார்க்கிறோம் என்றார்.