திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் பகுதியில் திருப்பத்தூர் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சட்டமன்ற தொகுதிகளுக்கான செயலாளர், தலைவர், மகளிர் தலைவர், செயலாளர், பொறுப்பாளர்களுக்கு நியமனம் மனுக்கள் பெரும் நிகழ்ச்சி மற்றும் ஆலோசனை கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மு. வேல் முருகன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஆதி. குமரவேல் அனைவரையும் வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பாமக செய்தி தொடர்பாளரும், சமூக நீதி பேரவை மாநில தலைவருமான வழக்கறிஞர் கே. பாலு, சிறுபான்மை மாநில துணைத்தலைவர் எஸ். ஷேக்முகைதீன், பசுமை தாயகம் மாநில துணைச்செயலாளர் கே. பொன்மலை ஆகியோர் கலந்து கொண்டு பொறுப்புகளை நியமிக்க நியமன மனுக்களை பெற்றுக்கொண்டு கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
கூட்டத்திற்கு பின் பாமக செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் கே.பாலு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவு அளிக்கக்கூடிய அணிதான் ஆட்சி அமைக்க முடியும். சமீப காலமாக தமிழ்நாட்டில் தற்குறி அரசியல் ஒரு விவாத பொருளாக மாறிவருகிறது. எடப்பாடி பழனிசாமியை தற்குறி என்று கூறியது பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் என்னை தற்குரி என்று தரக்குறைவான வார்த்தைகளை கூறி விமர்சனம் செய்துள்ளார். அதற்கு அரசியல் நாகரீகத்தின் அடிப்படையில் நான் பதிலடி கொடுக்காமல் கடந்து சென்றேன். திருமாவளவன் இன்று ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அரசியல் இயக்கத்தை நடத்தி வருகிறார். பாட்டாளி மக்கள் கட்சியை பல்வேறு விமர்சனங்களை செய்து வருகிறார்.
பாட்டாளி மக்கள் கட்சி அரசியல் இயக்கமாக மாறிய பின்னர் மிக பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு, தேசிய அளவில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் 27 சதவீதம் இட ஒதுக்கீடு, இஸ்லாமியர்களுக்கு 3 அரை சதவீத இட ஒதுக்கீடு, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் இருந்து 3 சதவீதம் பிரித்து அருந்ததியினரிக்கு தனி உள் ஒதுக்கீடு பெற்று தந்துள்ளோம். பல்வேறு போராட்டங்களை நடத்தி இந்தியா முழுவதும் 90 ஆயிரம் மதுக்கடைகளை மூடியுள்ளோம்.
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 2 பேரை மத்திய அமைச்சராக்கியுள்ளோம். ஆனால் திருமாவளவன் அரசியல் இயக்கம் தொடங்கியது முதல் இன்று வரை ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக சலுகை, உரிமை பெற்று தந்துள்ளேன் என்று ஒன்றை சொல்ல முடியுமா? சமீபத்தில் கூட திருமாவளவன், தனது பிறந்தநாள் அன்று பாமகவை பற்றியும், ராமதாஸ் பற்றியும் மிகவும் தரம் தாழ்ந்த கவிதையை பாடி ரசித்தார். ஆனால் ராமதாஸ் 86ஆவது பிறந்த நாளை 86 மரக்கன்றுகள் நட்டு வைத்து கொண்டாடினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் பாலகிருஷ்ணன் மத்திய அரசு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கையை வைத்துள்ளார். அதை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்கிறது. இது சமூக நீதிக்கு வலு சேர்க்கும் வகையில் அமைத்துள்ளது. ஆனால் அவர் தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சொல்லவில்லை. அப்படி நடத்தவில்லை என்றால் 29 சதவீத இட ஒதுக்கீடடிற்கு ஆபத்து என்று தெரிந்தும் ஏன் அவர் சொல்லவில்லை என்று கேள்வி எழுப்பினார். இந்த பேட்டியின் போது கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்