திருப்பத்தூர் ரயில் நிலையம் இருப்புப் பாதை அருகே சந்திரன் நகர் பகுதியில் ரயில்வே துறை சார்பாக சுமார் 50க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
இந்த பிளாஸ்டிக் பெட்டிகளில் ரயில் நிலையம் கண்ட்ரோல் கேபின் உள்ளிட்ட பகுதிகளுக்கு இணைப்புகளை ஏற்படுத்த பூமிக்கடியில் புதைப்பதற்காக கண்ட்ரோல் கேபிள்கள் அதற்குள் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை அந்த வழியாக சென்ற மர்ம நபர்கள் அந்த பிளாஸ்டிக் பெட்டிகள் மீது தீ வைத்து சென்றதால் மல மலவென பற்றி எரிந்த தீப்பிழம்பு விண்ணை தொடும் கரும்புகை மூட்டத்துடன் கொழுந்து விட்டு எரிந்தது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் திருப்பத்தூர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய காவல் ஆய்வாளர் முருகன் தலைமையிலான பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு கவர்கள் சுமார் 2 மணி நேரமாக போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தின் காரணமாக பொதுமக்களுக்கு பெரும் சேதம் ஏதும் ஏற்படாத நிலையில் விலை மதிப்புடைய ரயில்வே துறைக்கு சொந்தமான கண்ட்ரோல் கேபிள்கள் எரிந்து நாசமாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.