காவேரிப்பாக்கம் அருகே உதயம் நகர் மற்றும் தேவராஜ் நகர் உள்ளன. இங்கு 600-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளன. இப்பகுதி மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்குவ தற்கு சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கடப்பேரி, ராமாபுரம் கிராமத்திற்கு சென்று வருகின்றனர். இதனால், எந்த பொருட்கள் எப்போது வழங்குகின்றனர் என தெரியாமல், பொதுமக்கள் பொருட்கள் வாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் ரேஷன் பொருட்கள் வாங்கிக்கொண்டு, தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது, அதிக வேகத்தில் வரும் கனரக வாகனங்களால் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, உதயம் நகரில் பகுதி நேர ரேஷன் கடை திறக்க வேண்டும்.
இது குறித்து பல முறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என்றும், பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு உதயம் நகரில் பகுதி நேர ரேஷன் கடை திறக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.