திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி பகுதியில் கடைகளுக்கு முன்பு ஆக்கிரமிப்பு இருப்பதாக கூறி தேசிய நெடுஞ்சாலை துறையினர் சில நாட்களுக்கு முன்பு ஆக்கிரமப்புகளை அகற்ற செய்ய வேண்டும் என கடையின் உரிமையாளர்களிடம் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று கடைகளின் முன்பே உள்ள பேனர், இரும்பாலான சீட்டு, மற்றும் கான்கிரீட் தரை, ஆகியவற்றை இடித்து தரைமட்டம் ஆக்கி ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
இந்த நிலையில் கடைகளுக்கு முன்பு குவிந்த கிடந்த மண்ணை மண்டலவாடி பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் ஒரு லோடு 500 ரூபாய்க்கு எடுத்துச் சென்று சுற்றுவட்டார பகுதிகளில் விற்று லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதனை அறிந்த தேசிய நெடுஞ்சாலை இளநிலை பொறியாளர் வினோத் குமார் அனுமதி இல்லாமல் மண்ணை எடுத்துச் சென்ற நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும் நெடுஞ்சாலைத் துறையினருக்கு தெரிந்தே மண் விற்பனை செய்யப்பட்டதா? அல்லது மண் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் பணத்திற்காக ஆசைப்பட்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்டனரா? எனவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.