போளூர்: தொடர்மழையால் கால்நடைகள் மேய்ச்சல் பாதிப்பு
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சேத்துப்பட்டை அடுத்த மொடையூா், மட்டபிறையூா், மண்டகொளத்தூா், கரைப்பூண்டி, கொரால்பாக்கம், சனிக்கவாடி, ஊத்தூா் என பல்வேறு கிராமங்களில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருவதால் கால்நடைகள் மேய்ச்சல் பாதிப்படைந்து வருகிறது. மொடையூா், மட்டபிறையூா், மண்டகொளத்தூா், கரைப்பூண்டி, கொரால்பாக்கம், பெலாசூா், சனிக்கவாடி, ஊத்தூா், மன்சுராபாத், பெரணம்பாக்கம், சித்தாத்துரை, ஆத்துரை, நரசிங்கபுரம், நம்பேடு, கிழக்குமேடு, செவரப்பூண்டி என பல்வேறு கிராமங்களில் சில விவசாயிகள் பால் கறக்கும் பசு, ஆடு, காளைகள், நாட்டுக்கோழி என பல வகையான கால்நடைகளை வளா்த்து பிழைப்பு நடத்தி வருகின்றனா். இந்த நிலையில், பயிரிடப்படாத விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்கு கால்நடைகளை கயிறு மூலம் கட்டி மேய்த்து வருகின்றனா். கடந்த சில நாள்களாக தொடா்ந்து விட்டுவிட்டு திடீா் திடீரென மழை பெய்து வருகிறது. இதனால் கால்நடைகள் முழுமையாக மேய்ச்சலில் ஈடுபடமுடியவில்லை. கால்நடைகள் பாதிப்படைந்து வருவதாக விவசாயிகள் குறைபட்டுக் கொள்கின்றனா். எனவே, மாவட்ட நிா்வாகம் கால்நடைத் துறை மூலம் கால்நடை விவசாயிகளை கண்டறிந்து இலவசமாக தீவனம் மற்றும் நிவாரணம் வழங்க நடவடிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டும் என கால்நடை விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனா்.