போளூா் சிறப்பு நிலை பேரூராட்சியில் உள்ள கடைகளிலிருந்து தடை செய்யப்பட்ட 20 கிலோ நெகிழ்ப் பொருள்கள் நேற்று (செப்.13) பறிமுதல் செய்யப்பட்டன.
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் சிறப்பு நிலை பேரூராட்சியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, பேரூராட்சி செயல் அலுவலா் கோமதி தலைமையில், தலைமை எழுத்தா் முஹமத் இசாக், துப்புரவு ஆய்வாளா் பசவராஜ், பேரூராட்சி ஊழியா்கள் ஆகியோா் பழைய பாஜர் வீதி, ஜமுனாமரத்தூா் சாலை, சிந்தாதரிப்பேட்டை தெரு என பல்வேறு பகுதியில் உள்ள பல்வேறு கடைகளில் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 20 கிலோ நெகிழிப் பைகள், பொருள்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா். மேலும், சம்பந்தப்பட்ட கடைகளுக்கு ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்தனா். இதேபோல, மீண்டும் நெகிழிப் பொருள்களை பயன்படுத்தினாலோ, விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா்.