திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் யானை, புலி, மான், சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகிறது. அவற்றுக்கான நீராதாரம் மற்றும் வனத்தின் பாதுகாப்பை உறுதி செய்தும் வகையில் வனத்துறையினர் நாள்தோறும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் வனத்துறையினர் கூட்டு புலத்தணிக்கையில் இருந்த போது ஜம்புக்கல்கரடு பகுதியில் கடமான் வேட்டையாடப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் விரைந்து சென்ற வனத்துறையினர் ஆண்டியகவுண்டனூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் கையில் பையுடன் சுற்றித்திரிந்த 5 நபர்களை பிடித்து உடுமலை வனச்சரகத்திற்கு அழைத்து வந்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் மலையாண்டி கவுண்டனூரை சேர்ந்த பிரபு ( 24), பரதராமன்(43),
பெருமாள் புதூரை சேர்ந்த சதீஸ்( 27), எலையமுத்தூரைச் சேர்ந்த மாணிக்கம் (24),
வசந்தகுமார்(25) ஆகியோர் ஜம்புக்கல்கரடு மலைப்பகுதியில் கண்ணி வைத்து கடமானை வேட்டையாடி கறியை விற்பனை செய்வதற்கு முயற்சித்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவர்களிடமிருந்து 4½ கிலோ கடமான் கறி பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து வழக்கு பதிவு செய்த வனத்துறையினர் 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.