தமிழ்நாடு சர்வோதயா சங்கம் மூலமாக ஏராளமான கைவினைப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு காதி கிராப்ட் மையங்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மூங்கில் பொருட்கள் ஊதுபத்தி, சோப், மெத்தைகள், கைவினை பொருட்கள் என ஏராளமான பொருட்கள் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பொருட்கள் தரம் மிகுந்தவை என்பதால் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
இந்நிலையில், திருப்பூர் தலைமை அலுவலகத்தில் கடந்த 2 ஆண்டுகளாகப் பொருட்கள் முறையாக உற்பத்தி செய்யப்படாமல், வெளியிலிருந்து கொள்முதல் செய்து விற்பனை செய்யும் பொருட்களைக் கொள்முதல் செய்து தராமல் மெத்தனம் காட்டி வருவதால் விற்பனை பெருமளவு சரிந்து உள்ளதாக சர்வோதய சங்க விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் குற்றஞ்சாட்டினர்.
அதேபோல பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் வேலை இழந்து, அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உடனடியாக உற்பத்தியை அதிகரித்து சர்வோதய சங்கத்தை மீட்டெடுக்க வேண்டும் எனவும் கோரி சர்வோதய சங்க விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் திருப்பூர் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.