கடைமடைக்கு வந்த தண்ணீர்: விவசாயிகள் பொங்கல் வைத்து வழிபாடு

69பார்த்தது
ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட கீழ்பவானி பாசன விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து ஆண்டுதோறும் ஜனவரி, ஆகஸ்ட் மாதங்களில் இரு பிரிவுகளாக எண்ணை வித்து பயிர் மற்றும் நஞ்சை சம்பா நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கீழ் பவானி பாசன விவசாயிகள் நஞ்சை சம்பா நெல் சாகுபடி செய்வதற்கு பவானிசாகர் அணையில் இருந்து கால்வாய் வழியாக உடைப்பு சீரமைப்பிற்கு பிறகு கடந்த 22ஆம் தேதி காலை முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்த தண்ணீர் கடைமடை பகுதியான மங்கலப்பட்டி கிராமத்திற்கு நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் கடந்து சென்றது. இதைத்தொடர்ந்து கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கம் நிர்வாகிகள், கடைமடை விவசாயிகள் ஏராளமானோர் மங்கலப்பட்டி கால்வாய் சென்று பார்த்தனர். பின்னர் நேற்று(ஆக.27) அங்கு சக்கரை பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். இதை அடுத்து விவசாயிகள் அனைவரும் ஒன்று திரண்டு கடைமடை பகுதி கால்வாயில் சென்ற தண்ணீரில் மலர் தூவி வணங்கி மரியாதை செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி