முத்தூர் பேரூராட்சி பகுதிகளில் தெரு நாய்களை கட்டுப்படுத்துவது மற்றும் வீட்டில் வளர்க்கும் நாய், பூனை உட்பட அனைத்து செல்ல பிராணிகளுக்கும் வெறி நோய் தடுப்பூசி செலுத்துவது சம்பந்தமான ஆய்வு கூட்டம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சுந்தராம்பாள் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் அப்பு முன்னிலை வகித்தார்.
செயல் அலுவலர் ஆல்பர்ட் தியாகராஜன் வரவேற்றார். கூட்டத்தில் முத்துர் அரசு கால்நடை மருத்துவர் மஞ்சுளா கலந்துகொண்டு நாய்களுக்கு தடுப்பூசி போடாதவர்கள் வரும் நாட்களில் மருத்துவமனை அலுவலக நேரத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றார்.
பேரூராட்சி பகுதிகளில் சுற்றித் திரியும் தெருநாய்கள் அனைத்தையும் பிடித்து கட்டுப்படுத்த தேவையான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வது என்றும் பொதுமக்கள் தங்கள் வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு தடுப்பூசி போட்டு வெளியில் விடாமல் வளர்க்க வேண்டும் என்றும், தெருநாய்களை பேரூராட்சி அல்லது கால்நடை துறையை நிர்வகித்திடமும் ஒப்படைத்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் வர்த்தகர்கள், வீட்டில் நாய் வளர்ப்பவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.