திருச்சி மாவட்டம், முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்களுக்கான சாதாரண கூட்டம் நடைபெற்றது.
முசிறி ஊராட்சி ஒன்றிய குழுவின் கடைசி கூட்ட நிகழ்வை ஒன்றிய குழு தலைவர் மாலா ராமச்சந்திரன் தலைமை ஏற்று நடத்தினார்.
ஒன்றிய ஆணையர்கள், பொறியாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை விடுத்து பேசினர். அதனைத் தொடர்ந்து ஒன்றிய குழு தலைவர் மாலா ராமச்சந்திரன் பேசும் போது கடந்த ஐந்து வருடங்களாக முசிறி ஒன்றியத்தில் மக்களுக்கு பணியாற்றும் வாய்ப்பினை அளித்த தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே. என். நேரு, சட்டமன்ற உறுப்பினர்கள் காடுவெட்டி தியாகராஜன், கதிரவன், ஸ்டாலின்குமார் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து ஒன்றிய கவுன்சிலர்கள் பலரும் நெகிழ்ச்சியுடன் நன்றி கூறி விடை பெற்றனர். ஒன்றிய குழு துணைதலைவர் ரமேஷ் நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது. வரும் 5-ம் தேதியுடன் உள்ளாட்சி அமைப்புகளின் காலம் முடிவடைய உள்ள நிலையில் ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கான கடைசி கூட்டம் என்பதால் அனைவரும் சேர்ந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.