தூத்துக்குடி: திருச்செந்தூரில் அலைமோதிய பக்தர்கள்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். விழாக்காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து முருகப்பெருமானை வழிபடுகின்றனர். வாரவிடுமுறை தினமான நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் வழக்கம்போல் நடைபெற்றது. அதிகாலையில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் திரளான பக்தர்கள் குடும்பத்தினருடன் கோவிலில் குவிந்தனர். இதனால் கோவில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடிய பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். சுபமுகூர்த்த தினமான நேற்று கோவில் சண்முக விலாச மண்டபத்தில் 50-க்கும் மேற்பட்ட புதுமண ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. புதுமண தம்பதியர்களுடன் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் கோவில் வளாகம், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் புகைப்படம் எடுத்தனர். கார்த்திகை மாதம் தொடங்கியதால், சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களும் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இதனால் அய்யப்ப பக்தர்களின் கூட்டமும் அதிகரித்தது.