திருச்செந்தூரில் சுற்றுலா தொடர்பான பணிகளை அமைச்சர் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மணப்பாடு குலசேகரப்பட்டினம் காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா தொடர்பான ஆய்வுப் பணிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் மேற்கொண்டார். அப்போது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் சுற்றுலாத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலமாக நடத்தப்பட்டுவரும் பக்தர்கள் தங்கும் விடுதியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பக்தர்கள் தங்கும் விடுதியினை முறையாக பராமரித்து பாதுகாக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து திருச்செந்தூரில், சுற்றுலாத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஓட்டல் தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை மேலும் மேம்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து காயல்பட்டினம் கடற்கரையில் பார்வையிட்டு அங்கு சுற்றுலாவுக்கு தேவையான வசதிகள் அனைத்தும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அங்குள்ள பொதுமக்களிடம் அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்தார். திருச்செந்தூர் கோவிலில் கட்டி முடிக்கப்பட்டு தற்போது சுற்றுலா துறையிடம் வழங்கப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதி முறையாக பராமரிக்கப்படுகிறதா, பக்தர்கள் வேண்டிய வசதிகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தார்.