கழுகுமலையில் கிரேன் வாகனம் மோதியதில் பெண் படுகாயம் அடைந்தார். போலீசார் வழக்குப்பதிந்து டிரைவரை கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகே உள்ள கரடிகுளம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுப்பையா மனைவி குலசேகரம் (65). இவர், நேற்று முன்தினம் (செப்.16) கழுகுமலையில் உள்ள ரைஸ் மில்லில் கோதுமை, உளுந்து அரைத்து விட்டு தனது ஊருக்கு செல்வதற்காக மேலபஜார் பகுதி கயத்தாறு சாலையில் உள்ள பஸ் ஸ்டாப்பிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கிரேன் வாகனம் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்த அவரது இடது காலில் டயர் ஏறி நசுக்கியது. இதில் அவர் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரை கழுகுமலை போலீசார் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி வழக்கு பதிவு செய்து கிரேன் டிரைவரான தூத்துக்குடி மேல சண்முகபுரம் தாமோதரன் நகர் பகுதியை சேர்ந்த குருமூர்த்தி மகன் கார்த்தீசுவரன் (39) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.