திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சி முருகப்பா நகர் செப்டம்பர் 5-ஆம் தேதி நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது. அந்த வீட்டில் குடியிருந்த சட்டக் கல்லூரி மாணவன் பிரேம்குமார் அவரது மனைவி மஞ்சுளா அவர்களது இரு ஆண் குழந்தைகள் தீக்காயத்தில் படுகாயம் அடைந்து நான்கு பேரும் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி இறந்து போயினர்.
இறுதியாக இறந்து போன சட்ட கல்லூரி மாணவன் பிரேம்குமார் உடல் சென்னையில் இருந்து திருத்தணிக்கு வாகனத்தில் எடுத்துவரப்பட்டது. காசிநாதபுரம் என்ற பகுதியில் வரும் பொழுது, திருத்தணியில் தலித் மக்கள் கூட்டமைப்புகள் இணைந்து சட்டக் கல்லூரி மாணவன் வந்த வாகனத்தை நிறுத்தி சாலை நடுவே போராட்டம் மேற்கொண்டனர்.
அப்போது இந்த வழக்கில் துரித விசாரணை மேற்கொள்ள வேண்டும். இந்த தீ விபத்து குறித்து இறுதி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். மேலும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, அவரது சொந்த ஊரான தாழவேடு காலனியில் பிரேம்குமார் பிரேதம் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது.