

பொன்னேரி: முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சி ஏற்பாடு; காவல் ஆணையர் ஆய்வு
பொன்னேரி ஆண்டார்குப்பம் ஊராட்சியில் 1 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்க உள்ள நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து ஆவடி காவல் ஆணையர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட ஆண்டார்குப்பம் ஊராட்சியில் வருகிற 19ஆம் தேதி 1 லட்சம் பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. பொன்னேரி அடுத்த பெருஞ்சேரியில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் இடம் சீரமைக்கும் பணி நடைபெற்று தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில் ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள பயனாளிகள் எண்ணிக்கை, கட்சி நிர்வாகிகள் எண்ணிக்கை, அப்பகுதியில் நடைபெறும் உள்ள கோவில் விழாக்கள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து மேடை அமைக்கப்பட தேர்வு செய்யப்பட்ட பகுதி, முதலமைச்சர் மேடைக்கு செல்லும் பாதை ஆகியவை குறித்த வரைபடங்களுடன் அதிகாரிகள் விளக்கினர். மேலும் முதலமைச்சர் ரோட் ஷோ நடத்த உள்ள பொன்னேரி மீஞ்சூர் ஆகிய சாலைகளிலும், அப்போது மேற்கொள்ளப்பட வேண்டிய போக்குவரத்து மாற்றங்கள் குறித்தும் பத்திற்கும் மேற்பட்ட காவல்துறை வாகனங்களுடன் காவல் ஆணையர் நேரில் ஆய்வு செய்தார்.