பூந்தமல்லி பஸ் நிலையத்தில் அடிப்படை வசதியின்றி அவதி
பூந்தமல்லி, சென்னை பெருநகரத்திற்கும், மேற்கு பகுதி மாவட்டங்களுக்குமான நுழைவாயிலாக பூந்தமல்லி உள்ளது. சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை; வண்டலுார்-மீஞ்சூர் வெளிவட்ட சாலை; மவுன்ட்-பூந்தமல்லி சாலை; ஆவடி-கரையான்சாவடி சாலை; குன்றத்துார்-கரையான்சாவடி சாலை ஆகிய பிரதான சாலைகளை இணைக்கும் பகுதியாகவும் உள்ளது. சென்னை புறநகரில் பூந்தமல்லி நகராட்சி உள்ளதால், இங்கு குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து, மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் போக்குவரத்து வசதிக்காக, பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு, பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால், பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் இன்னும் மேம்படவில்லை என பயணியர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். பூந்தமல்லியில் மெட்ரோ மேம்பால பணிகள் அடுத்த ஆண்டு நிறைவு பெற்று, சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, பூந்தமல்லியை அழகுபடுத்தும் வகையில் பேருந்து நிலையத்தை மேம்படுத்தி, நவீன வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.