திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோயிலில் சுந்தரர் குருபூஜை.
திருக்காட்டுப்பள்ளி சௌந்தர்ய நாயகி உடனுறை ஸ்ரீ அக்னீஸ்வர ஸ்வாமி கோயில் திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம் ஆகும். இக்கோயிலில் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் குருபூஜை விழா நடந்தது.
குருபூஜையை முன்னிட்டு காலை நால்வர் மண்டபத்தில் சுந்தரர், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகருக்கு பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர்புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலை சித்தன்வாழூர் பிரும்மஸ்ரீ ராமசாஸ்திரிகள் "சுந்தரரும்- சுந்தரரும் "என்ற தலைப்பில் உபன்யாசம் நிகழ்த்தினார். ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் (உற்சவர்) வெள்ளை யானை வாகனத்தில் கோயில் பிரகார வலம் வந்து திருக்கைலாய (நொடித்தான் மலை) திருஅஞ்சைகள பதிகம் பாராயணம் நடந்தது. சுந்தரருக்கு இறைவன் ரிஷப வாகன காட்சி நல்குதல் நடந்தது. பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.