மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் காவிரி நீரை நம்பி டெல்டா மாவட்டங்களில் விவசாயம் மட்டுமின்றி மீன்பிடித் தொழிலும் இருந்து வருகிறது. ஆறுகளில் வரும் தண்ணீர் ஏரிகளிலும், குளங்களிலும் நிரப்பப்படும். அவ்வாறு நீர் நிரப்பப்பட்ட ஏரிகளிலும், குளங்களிலும் ஆற்றிலிருந்து தண்ணீரோடு சேர்ந்து மீன்களும் வருவதால் ஏரி, குளங்களில் இயற்கையாக வளர்ந்து வருகிறது. பின் அவை குத்தகைக்கு விடப்பட்டு மீன்கள் வளர்ந்தபின் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும்.
அதுமட்டுமின்றி ஆறுகளிலும், சிறு கால்வாய்களிலும் அப்பகுதி சிறு வியாபாரிகள் வலைவிரித்து மீன்பிடித்து ஆற்றங்கரை ஓரத்திலும் அதைய ஒட்டியுள்ள பகுதிகளிலும் தரைக்கடைகள் அமைத்து விற்பனை செய்வது வழக்கம். இன்னும் சிலர் ஆற்று மீன்களை பிடித்து கூடைகளில் எடுத்துச்சென்று தெருக்களிலும், சந்தைகளிலும் கொண்டுசென்று விற்பனை செய்வது வழக்கம். ஆறுகளில் பிடிக்கப்படும் ஆத்துவளை, கண்ணாடிகெண்டை, ரோகு, கட்லா, வாளமீன், அயிரை, வெளிச்சி, கெண்டைபொடி மற்றும் ஆற்று இறால் போன்றவை வளர்ப்பு மற்றும் கடல்மீன்களை விட ருசிமிகுந்தவை என்பதால் ஆற்று மீன்களுக்கான தேவை எப்போதும் இருக்கும். ஆனால், ஆறுகளில் தற்போது தண்ணீர் வரத்து இல்லாததால் நாட்டு மீன் பிடித்தொழில் முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால், கடைகளிலும், மார்கெட்டிலும் வளர்ப்பு மற்றும் கடல் மீன்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.