தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு,
இதுநாள் வரை மாற்றுத்
திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாதவர்களுக்காக சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
வரும் ஜூன் 11ஆம் தேதி தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலும், ஜூன் 18ஆம் தேதி கும்பகோணம் பேருந்து நிலையம் அருகில்,
கே. எம். எஸ். எஸ் வளாகத்திலும், ஜூன் 25 ஆம் தேதி பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் எதிரே, கிராம சேவை கட்டிடத்திலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இம்முகாம்களில் எலும்பு முறிவு, காது-மூக்கு- தொண்டை பிரிவு, மன நலம், மற்றும் கண் மருத்துவர் ஆகிய அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு, மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மருத்துவச்சான்று வழங்க உள்ளார்கள். அதன் அடிப்படையில், மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.
எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தில், இதுநாள் வரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் 6 புகைப்படத்துடன் இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வந்து கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இதுநாள்வரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள், முகாமில் உரிய ஆவணங்களுடன், மாற்றுத்
திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகலுடன் வந்து விண்ணப்பித்து பயன்பெறலாம்" எனத் தெரிவித்துள்ளார்.