தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் பேராவூரணி உணவுப் பாதுகாப்பு அலுவலர் வேல்முருகன் தலைமையிலான குழுவினர் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உணவுப் பொருட்களை விற்பனை செய்ததற்காக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் காலாவதியான உணவுப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இது குறித்து வேனில் இருந்தவர்களிடம் விசாரணை செய்த போது, காலாவதியான உணவுப் பொருட்களை கடைகளில் இருந்து திரும்பப் பெற்றதாக தெரிவித்தனர். ஆனால் அதற்குரிய ஆவணங்கள் இல்லாததால், சுமார் 20 கிலோ எடையுள்ள உணவுப் பொருள்கள் கைப்பற்றப்பட்டு உடனடியாக அழிக்கப்பட்டது. தரம் குறைந்த, காலாவதியான உணவுப் பொருட்களை விநியோகம் செய்வதும், கடைகளில் விற்பனை செய்வதும் தண்டனைக்குரிய குற்றமாகும் என அறிவிக்கப்பட்டது.