தஞ்சை: மழையால் கருவாடு காயவைக்கும் பணி பாதிப்பு பலர் வேலை இழப்பு

82பார்த்தது
தஞ்சை: மழையால் கருவாடு காயவைக்கும் பணி பாதிப்பு பலர் வேலை இழப்பு
தொடர் மழை காரணமாக கருவாடு காயவைக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளதால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை இழப்பு ஏற்பட்டு உள்ளது.

தஞ்சை மாவட்டம் கொள்ளுக்காடு தொடங்கி மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், மந்திரிப்பட்டினம் செம்பியன்மாதேவிபட்டினம் உள்பட 34 மீனவ கிராமங்களில் சுமார் 4, 500 நாட்டுப் படகுகளும், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் சுமார் 146 விசைப் படகுகளும் மீன்பிடிதொழில் செய்து வருகிறது. அன்றாடம் வரக்கூடிய இறால், நண்டு, மீன், கணவாய் போன்றவற்றை விற்பனை செய்து வருகின்றனர்.

இதில் கழிவாக கூடிய மீன்களையும் சங்காயம் எனப்படும் சிறிய வகை மீன்களையும் வாங்கி அங்கேயே காயவைத்து கருவாடு விற்பனை தொழிலும் செய்து வருகின்றனர். உணவுக்கு பயன்படும் கருவாடுகளை விட கோழித் தீவனமாக பயன்படும் சிறியவகை சங்காய வகை மீன்களுக்கு பெரும் வரவேற்பு உள்ளது. இந்த மீன்களை மொத்தமாக வாங்கி காயவைத்து கிலோ ரூ. 10 முதல் ரூ. 12 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இந்த கருவாடுகள் அனைத்தும் நாமக்கல் போன்ற பகுதிகளுக்கு கோழி தீவனத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இத் தொழிலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வந்தனர். இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக இந்த பகுதிகளில் தொடர்மழை பெய்து வருவதால் வெயில் இன்றி கருவாடு காய வைக்கும் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி