பட்டுக்கோட்டை - Pattukottai

பேராவூரணி: கழிவுநீர் தொட்டியில் விழுந்த காளைக்கன்று கயிறு கட்டி மீட்பு

பேராவூரணி: கழிவுநீர் தொட்டியில் விழுந்த காளைக்கன்று கயிறு கட்டி மீட்பு

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மாணவியர் விடுதி பின்புறம் உள்ள வயல்வெளியில் சனிக்கிழமை மாலை, அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தங்கள் ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது பேராவூரணி பாந்தகுளம் பகுதியைச் சேர்ந்த கௌசல்யா என்பவருக்குச் சொந்தமான ஒரு காளைக் கன்று வழி தவறி, அரசு பெண்கள் மாணவியர் விடுதி பின்புறம் சென்றது. அங்கே இருந்த கழிப்பறை கழிவுநீர்த் தொட்டியின் மேல் ஏறியபோது காளைக்கன்றின் எடை தாங்காமல், சிமெண்ட் சிலாப் இடிந்து காளைக் கன்று கழிவுநீர்த் தொட்டிக்குள் விழுந்தது.  இதுகுறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் பேராவூரணி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் வீ. சீனிவாசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சுப்பையன், நிரஞ்சன், ஆகாஷ் கண்ணன், கபிலன், குமரேசன் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் விரைந்து சென்று, துர்நாற்றத்தையும் பொருட்படுத்தாமல் கயிறைக் கட்டி காளைக்கன்றை உயிருடன் மீட்டனர். தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் கழிவுநீர்த் தொட்டிக்குள் சிக்கிய காளைக்கன்றை மீட்ட தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా