அங்காடிகள் மூலம் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய வேண்டும்:

55பார்த்தது
நியாய விலைக் கடைகளில் பாமாயிலுக்குப் பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும். தென்னை சார் தொழில் வளர்ச்சிக்காக ஏற்றுமதி வாய்ப்புகளை ஊக்கப்படுத்த வேண்டும். தென்னையைத் தாக்கும் ஈரோ பைட், கருந்தாழை புழுக்கள், வேர்ப்புழு, வெள்ளை ஈ, கேரளா மற்றும் தஞ்சை வாடல் நோயைக் கட்டுப்படுத்த ஒன்றிய, மாநில அரசுகள் துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.  நோய்களை கட்டுப்படுத்த உரிய மருந்துகளை அறிமுகப்படுத்த வேண்டும்.
பேராவூரணி பகுதியில் கொப்பரைக் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். கொப்பரைக்கு உரிய விலையை நிர்ணயம் செய்து வருடம் முழுவதும் கொள்முதல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில், பட்டுக்கோட்டை ஆர்டிஓ அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   சங்க மாவட்டச் செயலாளர் ஆர். எஸ். வேலுச்சாமி தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் எம். செல்வம் முன்னிலை வகித்தார்.  தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி. நடராஜன், தென்னை விவசாயிகள் சங்க முன்னாள் மாநிலச் செயலாளர் ஆர். சி. பழனிவேலு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்டத் தலைவர் பி. செந்தில்குமார், ஒரத்தநாடு என். சுரேஷ்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.   நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி