பட்டுக்கோட்டை: மின்சாரம் தாக்கி பொக்லைன் ஆபரேட்டர் பலி
திருவாரூர் மாவட்டம் ரெங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகேசன். இவருடைய மகன் அரவிந்தன் (வயது 28). இவர் பட்டுக்கோட்டையை அடுத்த ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்த ரமேசின் மரப்பட்டறையில் பொக்லைன் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று காலை அரவிந்தன் வேலையை முடித்துவிட்டு தான் தங்கி இருந்த மரப் பட்டறையின் மாடிக்கு சென்றார். அப்போது அங்கு இருந்த பைப்லைனில் அவர் கை வைத்த போது அவரை மின்சாரம் தாக்கியது. இதனால் அரவிந்தன் மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே அரவிந்தன் இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.