தஞ்சை: செல்பி எடுக்க முயன்ற வாலிபர் கடலில் விழுந்து பலி
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஷேக் அலாவுதீன். இவரது மகன் அப்துல் கபூர் (19), இவர் சாதிக், நசீர் உள்ளிட்ட 8 நண்பர்களுடன் காரைக்கால் கடற்கரைக்கு சுற்றிப்பார்க்க வந்துள்ளனர். வாலிபர்கள் கடலில் இறங்கி குளித்தபோது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடலோர போலீசார் வாலிபர்களை எச்சரித்து விரட்டிவிட்டனர். அங்கிருந்து புறப்பட்ட வாலிபர்கள் முகத்துவார ஓரத்தில் நின்று செல்பி எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது அப்துல் கபூர் திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி கடலில் தவறிவிழுந்தார். சக நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியாததால், தீயணைப்பு துறை மற்றும் கடலோர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு துறையினர் வாலிபரின் உடலை மீட்டு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காரைக்கால் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.