தஞ்சை அரசு மகளிர் கல்லூரியில் மாணவர் பேரவை பணியேற்பு விழா
தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் மாணவர் பேரவை பணியேற்பு விழா நடைபெற்றது. கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாணவர் பேரவை தேர்தலில் மாணவர் தலைவராக மூன்றாம் ஆண்டு பிஎஸ்சி புள்ளியியல் மாணவி சோனா அகல்யா, இளநிலை மாணவர் துணைத் தலைவராக இரண்டாம் ஆண்டு இளங்கலை மாணவி வைசாலி, முதுநிலை மாணவர் துணைத்தலைவராக முதுகலை முதலாம் ஆண்டு ஆங்கில மாணவி சாஹிரா பேகம், மாணவர் செயலாளராக இரண்டாம் ஆண்டு பிஎஸ்சி கணிதவியல் மாணவி பாரதி, மாணவர் இணைச் செயலாளராக முதலாம் ஆண்டு இளங்கலை தமிழ் மாணவி ரிஸ்வானா பானு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு கல்லூரி முதல்வர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இவர்களுக்கான பணியேற்ப விழா, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் பிரதிநிதிகளுக்கு தலைமை பண்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் தலைமை பண்பு மென்திறன் பயிற்சியாளர் ஸ்டாலின் பீட்டர் பாபு பயிற்சி அளித்தார். கல்லூரி தேர்வு நெறியாளர் மலர்விழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கல்லூரி பேரவை துணைத் தலைவர் ரமா பிரியா வரவேற்றார். ஆங்கில உதவி பேராசிரியர் கவிதா நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆங்கில பேராசிரியர் சபுருன்னிஷா பேகம் செய்திருந்தார்.