தஞ்சாவூர்: குடும்பத் தகராறு; மகளை தூக்கிலிட்டு தந்தை தற்கொலை
தஞ்சாவூர் அருகே கோரிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் மகன் முருகேசன் (42). ஜே.சி.பி. ஆபரேட்டர். இவரது மனைவி சுகன்யா (29), மகள் நவ்யாஸ்ரீ (4). இந்நிலையில் 1 மாதத்துக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. இக்குழந்தையை சுகன்யா மருத்துவ பரிசோதனைக்காக தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு புதன்கிழமை காலை கொண்டு சென்றார். வீட்டில் முருகேசனும், நவ்யாஸ்ரீயும் இருந்தனர். மருத்துவ பரிசோதனை முடிந்த பிறகு சுகன்யா குழந்தையுடன் வீட்டுக்கு பிற்பகலில் திரும்பினார். அப்போது, முருகேசனும், நவ்யாஸ்ரீயும் தனித்தனியாக சேலையில் தூக்கிலிட்டு மாட்டிய நிலையில் இருந்தனர். சுகன்யாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து முருகேசனையும், நவ்யாஸ்ரீயையும் மீட்டு தஞ்சாவூரிலுள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் உயிரிழந்துவிட்டனர் என தெரிவித்தனர். தகவலறிந்த தாலுகா காவல் நிலையத்தினர் நிகழ்விடத்துக்குச் சென்று இருவரது உடல்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காவல் துறையினர் நடத்திய விசாரணையில் முருகேசன் 2 மாதங்களாக வேலைக்குச் செல்லவில்லை என்பதும், இதனால், கணவன் - மனைவி இடையே குடும்பத் தகராறு நிலவியதும், இதன் காரணமாக நவ்யாஸ்ரீயை முருகேசன் தூக்கிலிட்டு, தானும் தற்கொலை செய்ததும் தெரிய வந்தது.