தஞ்சாவூர்: மின்னணு முறையில் பயிர் சாகுபடி பரப்பு கணக்கெடுக்கும் பணி
தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண்மைத் துறை மற்றும் வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து, மின்னணு முறையில் பயிர் சாகுபடி பரப்பு கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் வேளாண்மைத் துறையின் சார்புத் துறைகளான தோட்டக்கலைத் துறை, விதைச்சான்றுத் துறை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலர்களும் பங்கேற்றுள்ளனர். தஞ்சாவூர் வட்டாரத்தில், குருங்குளம் மேற்கு கிராமத்தில் மின்னணு முறையில் பயிர் சாகுபடி பரப்பு கணக்கெடுக்கும் பணியினை வேளாண்மை இயக்குனர் பி. முருகேஷ் ஆய்வு செய்தார். பணியினை முறையாகவும் விரைவாகவும் செயல்படுத்துவதற்கு இயக்குநரால் அறிவுரை வழங்கப்பட்டது. இந்த ஆய்வில் ஈச்சங்கோட்டை டாக்டர் சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மையர் கே. ஆர். ஜெகன்மோகன், வேளாண்மை இணை இயக்குனர் வெ. சுஜாதா, மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் கோ. ஜெயசீலன், வேளாண்மை துணை இயக்குனர் சு. அய்யம்பெருமாள், வேளாண்மை உதவி இயக்குனர் கவிதா, தோட்டக்கலை உதவி இயக்குநர் முத்தமிழ் செல்வி, ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி பேராசிரியர் நித்யா தேவி மற்றும் மாணவர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர்.