தஞ்சை மாவட்டத்தில் நடப்பாண்டு 25,000 ஏக்கரில் கோடை நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தற்போது வரை 13,000 ஏக்கர் நடவு பணி நடைபெற்றுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். கடந்த ஆண்டு தாமதமாக ஜூலை மாதம் 28ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் குறுவை சாகுபடி எதிர்பார்த்த அளவு நடைபெறவில்லை.
சம்பா தாளடி சாகுபடி மூன்று லட்சத்து 23 ஆயிரம் ஏக்கரில் நடைபெற்றது. தற்போது மேட்டூர் அணையில் 100 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பதால் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. தற்போது தஞ்சை மாவட்டத்தில் முன்பட்ட குறுவை எனப்படும் கோடை நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது.
தற்போது பெரும்பாலான இடங்களில் ஆழ்துளை கிணறு உள்ள பகுதிகளில் மட்டும் சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தஞ்சை மாவட்டத்தில் நடப்பாண்டு 25,000 ஏக்கருக்கு மேல் முன்பட்ட குறுவை சாகுபடி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக பல்வேறு இடங்களில் பாய்நாற்றங்கள் தயார் செய்யப்பட்டு நடவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை 13,091 ஏக்கரில் கோடை நெல் சாகுபடி நடவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல இடங்களில் உழவு பணிகள் நடவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.