ஒரத்தநாட்டில் அரசு பெண்கள் கலைக்கல்லுாரி மாணவிகள் காலை, மாலை நேரங்களில் பேருந்து போக்குவரத்து இன்றி பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
ஒரத்தநாடு அரசு மகளிர் கல்லுாரியில் 5000க்கும் அதிகமான மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் ஒரத்தநாடு, திருவோணம், கறம்பக்குடி, வெட்டுவாக்கோட்டை, கக்கரக்கோட்டை, பட்டுக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமப்புறங்களை சேர்ந்த மாணவிகள் தினமும் காலை, மாலை நேரங்களில் கல்லுாரிக்கு வந்து செல்வதற்கு வசதியாக போதிய பேருந்து இயக்கப்படாத சூழலில் தினமும் மாணவிகள் கல்லுாரிக்கு வருவதில் தாமதம் ஏற்படுகிறது.
கல்லுாரி மாணவிகள் படிக்கட்டில் தொங்கியப்படி பயணம் செய்து வருகின்றனர். ஒரத்தநாட்டில் இருந்து வெட்டிக்காடு, திருவோணம், கறம்பக்குடி அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்லும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே நகரப்பேருந்து இயக்கப்படும் நிலையில், கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என கூறி கல்லுாரி மாணவிகள் ஒரத்தநாடு பேருந்து நிலையம் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் சுதா தலைமையில் போலீசார் மறியலிலில் ஈடுபட்ட மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பிறகு போக்குவரத்துக் கழக வணிக மேலாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் அலுவலர்கள், கூடுதலாக காலை மற்றும் மாலை வேளைகளில் இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மாணவிகள் கலைந்து சென்றனர்.